Saturday, May 26, 2012

கருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
கருவாடு - 50 கிராம்
கத்திரிக்காய் - 200 கிராம்
மொச்சை - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரக தூள்கள் - தலா அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
வெங்காயம், தக்காளி,பூண்டு,கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும். புளிக்கரைசலும் தயார் செய்து வைக்கவும்.பச்ச மொச்சை என்றால் அப்படியே கழுவி போடலாம்.காய்ந்த மொச்சை என்றால் வறுத்து தண்ணீரில் ஊறவைத்து வேகவிட்டு தோல் பிதுக்கி சேர்க்க வேண்டும்.

கருவாட்டு துண்டை இப்படி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.நல்ல மணமாக இருக்கும்.நன்கு அலசி சிறிய துண்டாக போட்டுக் கொள்ளவும்.






வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும், அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும், பின்பு தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு மிகச் சிறிதளவே போட்டு மூடியிட்டு வதங்க விடவும்.


புளிக்கரைசலோடு மசாலா தூள்கள் அனைத்தும் போட்டு,தேங்காய் விழுதும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் கலந்து வதங்கியவற்றுடன் சேர்க்கவும். வேக வைத்த மொச்சை சேர்க்கவும். நன்கு கொதித்து மசாலா புளி வாடை அடங்கட்டும். உப்பு சரி பார்க்கவும்.


சுத்தம் செய்த கருவாட்டை போடவும்.அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைக்கவும்.கொதி வரும்.கருவாடு விரைவில் வெந்து விடும். கடைசியில் தான் சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் கரைந்து விடும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான கருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய் ரெடி. இதனை வெறும் சோறு, பொரித்த அப்பளம், பொட்டுக்கடலை துவையலுடன் பரிமாறலாம்.